Print this page

தீண்டாதார் கல்வி. குடி அரசு - துணைத் தலையங்கம் - 29.11.1931. 

Rate this item
(1 Vote)

தாழ்த்தப்பட்டவர்களுக்குத் தனித்தொகுதி கொடுக்கக்கூடாது என்றும், தனித்தொகுதி கேட்டவர்கள் தாழ்த்தப்பட்டவர்களின் பிரதிநிதிகள் அல்லவென்றும், தேசீயவாதிகளும் தேசீயப்பத்திரிகைகளும் பிரசாரம் செய்துகொண்டு வருகின்றன. ஆனால், அவர்கள் பொதுப்பள்ளிக் கூடங்க ளில்கூட சேர்ந்து படிப்பதற்கு நமது நாட்டு மக்கள் தடையாக இருக்கிறார் கள் என்ற விஷயத்தை அறிந்தால் தாழ்த்தப்பட்ட தீண்டாதார்களை உயர்ந்த ஜாதி இந்துக்கள் எவ்வளவு கீழாகவும் கொடுமையாகவும் நடத்துகிறார்கள் என்பது விளங்கும். சென்னை சர்க்கார் 1930-31 வருஷத்தில் தொழில் இலாகா செய்துள்ள வேலையைப்பற்றி வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தீண்டப்படாதார்களுக்காக 1784 தனிப் பள்ளிக்கூடங்கள் இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கின்றனர். இவ்வாறு தீண்டாதவர்களுக்கெனத் தனிப்பள்ளிக் கூடங்கள் வைப்பதற்குக் காரணம் ‘கிராமாந்தரங்களில் ஜாதித் துவேஷங் கள் வேரூன்றிக் கிடப்பதால் அவர்கள் பொதுப்பள்ளிக்கூடங்களில் சேர்ந்து படிக்க முடியவில்லை ' என்றும் கூறியிருக்கின்றனர். இதிலிருந்து நமது தேச நிலை எவ்வாறு இருக்கிறதென்பதை அறிந்துகொள்ளலாம். இந்த நிலையில் உள்ள நமது நாட்டில் தீண்டாதார் பொதுத்தொகுதியில் நின்று எவ்வாறு தேர்த லில் வெற்றிபெறமுடியும் என்பதை யோசித்துப்பாருங்கள். பரோடா அரசாங்கத்தார் தீண்டாதார்களும் சமூக சமத்துவம் பெறுவதற்கு சாதகமாக அங்குள்ள பொதுப்பள்ளிக்கூடங்களில் தீண்டாதார்களை தாராளமாகச் சேர்த்துப்படிப்பிக்க உத்தரவு பிறப்பித்திருக்கின்றனர். ஆனால், நமது நாட்டில் பொதுப்பள்ளிக்கூடங்களில் தீண்டாதார்களைச் சேர்க்க மறுக்கக் கூடாது என்ற உத்திரவு இருந்தும், அதைப் கவனிப்பாரும், அமலுக்குக் கொண்டு வரவேண்டும் என்னும் கவலையுள்ளவர்களும் இல்லை. ஏனெனில், கல்வியிலாகாவில் உள்ள அதிகாரிகளும், பள்ளிக்கூடத்தில் உள்ளவர்களும் பார்ப்பனர்களாக இருப்பதே காரணமாகும். கிராமாந் தரங்களிலும், நகரங்களிலும், பொதுப்பள்ளிக்கூடங்களில் தீண்டாதார்களை தாராளமாகச் சேர்த்துக் கொண்டால், 1784 பள்ளிக்கூடங்கள் தனியாக இருக்கவேண்டிய அவசியம் இல்லையே. அவைகளுக்காகும் செலவைக்கொண்டு இன்னும் கல்வியை அதிகமாக விருத்தி செய்யவும் பள்ளிக்கூடங் கள் இல்லாத இடங்களில் பள்ளிக்கூடங்கள் வைக்கவும் முடியுமல்லவா? இதற்காக யார் முயற்சி யெடுத்து கொண்டு வேலை செய்கிறார்கள் என்று கேட்கிறோம். 

குடி அரசு - துணைத் தலையங்கம் - 29.11.1931.

 
Read 146 times